Saturday, July 26, 2008

நூலாய்வு: இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்

நூலாய்வு : அபத்தமான அறிமுகம்

நூல் : இஸ்லாம் மிகச் சுருக்கமான அறிமுகம்
மூலம் : மலிஸ் ரூத்வென்
மொழிபெயர்ப்பு : சிங்கராயர்
பக் : 202
விலை : ரூ 90
வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை. புத்தாநத்தம்,621310

அமெரிகாவிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக அச்சகம், 1997 ல் ஆங்கிலத்தில் வெளியிட்டு ஒலிவடிவமாக (audio book) வும் வெளிவந்துள்ள Islam A Short introduction என்ற நூலின் தமிழாக்கம் இது.

பல மாதங்களுக்கு முன்னாள் சமநிலைச் சமுதாயம் அலுவலகத்திலிருந்து மதிப்புரைக்கு அனுப்பப் பட்ட இந்நூலின் ஆரம்ப சில பக்கங்களை வாசித்த போது மொழி பெயர்ர்பின் மீது ஏற்பட்ட எரிச்சல் காரணமாக, “நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற பெயரில் ரொம்பத்தான் அக்கிரமம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்” என்று முனகிக் கொண்டே புத்தகத்தை மூடி வைத்து விட்டேன்.

“இஸ்லாம் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பின் ஈர்ப்பின் காரணமாக பல மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்நூலை எடுத்து வாசித்த போது அதிர்ச்சியடைந்தேன். ஆக்ஸ்போர்ட் அச்சகம் பிரசுரித்தது என்ற ஜிகினா போர்த்தப் பட்டு வெளிவந்துள்ள, கிருத்துவ இன்மாச்சரியம் கொண்ட, பொய்யான பல தகவல்களை கொண்ட ஒரு குப்பையான ஆய்வு இது.

இஸ்லாமை விளங்கிக் கொள்வதற்கு அல்ல. இஸ்லாம் குறித்த மேற்குலகின் எண்ண்வோட்டத்தை விளங்கிக் கொள்வதற்கே இந்நூல் உதவுகிறது. இஸ்லாத்தை விமர்சிக்க விரும்பிய எழுத்தாளர் மிகத் தந்திர்மாக அதற்கு இஸ்லாம் ஒரு சிறு அறிமுகம் என்றுபெயர் வைத்து இஸ்லாமை சிதைத்து சித்தரிக்கிறார். இஸ்லாமின் பெயரை பயன்படுத்தி கிருத்துவத்தை நிறுவ முயலும் கயமையான புத்திசாலித்தினம் நூல் நெடுக பரவி இருக்கிறது.

தமிழ் வாசகர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப் படுத்துவதற்காக அடையாளம் பதிப்பகம் இந்த நூலை தமிழாக்கம் செய்து பிரசுரித்திருப்பது அதுவும் அரசு நிதியுதவியுடன் பிரசுரித்திருப்பது அதிர்ச்சியூட்டும் ஒரு ஆச்சரியம். இந்த நூலை தமிழாக்கம் செய்து விட்டு அடையாளம் அடிக்ககிற தம்பட்டம் அருவருப்பானது மட்டுமல்ல பின் நவீனத்துவ போர்வை போர்த்திய அறியாமையும் கூட.

நூலில் பக்கத்துக்கு பக்கம் அபத்தங்க்ளின் தொகுப்பு. விரிவஞ்சியும் மொழியாக்கத்தில் காணப் படும் இருண்மை காரணமாகவும் சிலதை மட்டும் இங்கு தருகிறேன்.

மக்கா வெற்றியின் போது சிலைகளை அப்புற்ப்படுத்திய முஹம்மது (ஸல் அவர்கள் “இயேசு மேரி ஆகிய இரண்டு உருவங்களை மட்டும் விட்டு வைக்கிறார்”. (பக் – 53)

(ஹிரா குகையில் பெருமானார் தங்கியிருந்தத விசயத்தில்).சிரியாவுக்கு அவர் சென்ற பயணங்களில் சந்தித்த கிருஸ்துவ துறவிகளின் தூய நடைமுறைகளை கடைபிடித்திருப்பாரா என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபடுகின்றனர்.


பிற்காலத் தலைமுறையின் மதிப்பீடுகளும் அபிலாஷைகளும் ஏற்றப் பட்டதுமான அவரது (பெருமானார் )மாதிரி உருவம், வாய்மொழி வழியாகவும் ஹதீஸ் இலக்கியம் வழியாகவும் பரப்பப் பட்டது. அது கிறிஸ்து அல்லது புத்தர் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த பண்பாட்டு சமய பிம்பம்.

“முஸ்லிம்காகவும் இருந்து கொண்டு நாத்திகராவும் இருப்பதில் எந்தத் முரண்பாடும் இல்ல” ஆனால் “கிருத்துவ நாத்திகம்” பெரும்பாலான மக்களுக்கு முரணான பதமாகவே ஒலிக்கிறது.”

“பதினெட்டு வயது ஆயிஷாவின் மடியில் எதிர்பாராத விதமாக (முஹம்மது) உயிர் துறக்கிறார்”.

“இஸ்லாம் முஸ்லிம் என்ற சொற்கள் எல்லா இடத்திலும் சர்ச்சக்குரிய களங்களாகவே இருக்கின்றன”
“முஹம்மதின் நம்பிக்கைகுரிய மனைவியான கதீஜா” 152

“ஆயிஷாவுக்கும் இறைத்தூதரின் ஒரு தோழரான அபூஹூரைரவுக்குமிடையே தனிப்பட்ட முறையில் நிலவிய கொந்தளிப்பு” பக் : 153

கருத்துக்கள் ஒரு புறம் இருண்மையும் கருமையும் கொண்டதாக இருக்கிற தென்றால் தமிழ் மொழியாக்கம் பற்றி சொல்லவே வேண்டாம், சாமாண்ய வாசகனை மிரட்டுகிற மொழியாக்கம்.. இந்தப் புத்தகத்தை நீங்கள்முழுமையாக புரிந்து கொண்டால் உங்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கலாம்.

மொழியாக்கத்தில் காணப்படும் இருண்மையும் தவறுகளும் ஒரு கட்டத்தில் புத்தகத்தை தூக்கி வீசிவிடத் தூண்டுகின்ற. உதாரணத்திற்கு “ஹதீஸ் மர்பூஃ” என்பது இறைத்தூதர் மேல் ஏற்றிக் கூறப் பட்ட ஹதீஸ் என்று மொழியாக்கப் பட்டுள்ளது. (பக்:100 )

கண்டிக்கப் பட வேண்டிய ஒரு தொகுப்பு தமிழ் பேசும் முஸ்லிம்கள் கவனிக்காமல் இருப்பதனால் கடைகளில் இன்னும் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கிறது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்த்திடுவீர் என்று பாரதி பாடியது இது போன்ற குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கல்ல.

இந்நூல் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பதற்கான “அடையாள”மா?

No comments: